தமிழக செய்திகள்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

திற்பரப்பு அருவியில் சாரல் மழையுடன் குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருவட்டார்:

திற்பரப்பு அருவியில் சாரல் மழையுடன் குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதி வரை வெயில் கடுமையாக இருந்து வந்தது. தற்போது கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. மேலும் மலைப்பகுதியில் மழை பெய்ததால் கோதையாற்றுக்கு அதிக அளவு தண்ணீர் வருகிறது.

இதனால் திற்பரப்பு அருவியிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. கடந்த மாதம் இறுதி வரை அருவியின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தண்ணீர் கொட்டி வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலில் திருப்தி இன்றி குளித்துச்சென்றனர்.

உற்சாக குளியல்

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவி பகுதியில் சாரல் மழையுடன் குளு, குளு சீசன் நிலவியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் நீராடி, திற்பரப்பு தடுப்பணையில் உல்லாச படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்பினர். 

SCROLL FOR NEXT