தமிழக செய்திகள்

விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான ஒன்று திற்பரப்பு அருவியாகும். வார விடுமுறை தினத்தையொட்டி இன்று தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகள்

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்வதுடன் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தும் மகிழ்கின்றனர். மேலும் அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.

மாத்தூர் தொட்டிப்பாலம்

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். பாலத்தில் இருந்து கீழே இறங்கி தொட்டிப்பாலத்தின் பிரமாண்டமான தூண்களை பார்த்து ரசித்தனர். மேலும் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும் அன்னாசிப்பழங்களை வாங்கி சாப்பிட்டனர். அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் மாத்தூர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மொத்தத்தில் வார விடுமுறையான இன்று திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதிகள் 'களை' கட்டியது.