தமிழக செய்திகள்

கோடை விடுமுறையையொட்டி சின்னச்சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சின்னச்சுருளி அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

தேனி,

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே இயற்கை எழில் நிறைந்த சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால், தற்போது அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு குவிந்து வருகின்றனர். அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடி, சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இந்தநிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதிலும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அனைவரும் ஒரே இடத்தில் குளிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பெண்கள் தயக்கத்துடன் குளிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், பெண்கள் பாதுகாப்பாக உடை மாற்றிக்கொள்ளும் அறைகள் பராமரிப்பின்றி முட்செடிகள் சூழ்ந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே, சின்னச்சுருளி அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT