தமிழக செய்திகள்

வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தென்காசியில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, 26-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது.

அருவிகளில் நீண்ட வரிசை

முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

தென்மேற்கு பருவமழை

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும் என்றும், நெல்லை, தென்காசியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியதுடன், தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நெல்லையில் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தென்காசி தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா தெரிவித்து உள்ளார்.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுவாக பெய்ய உள்ளது. கேரளம் மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாவட்டங்களில் 3 நாட்கள் மழை பெய்யும். நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, 26-ந்தேதி வரை மழை நீடிக்கும்.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வால்பாறை, பொள்ளாச்சி, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். 25-ந்தேதி குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்தும் சீசன் களைகட்டும்" என்று தெரிவித்து உள்ளார்.