தமிழக செய்திகள்

விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் பூக்கள் அனைத்தும் வீணாவது வழக்கம்.

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2-வது வாரம் முதல் ஜூன் மாதம் 2-வது வாரம் வரை குளு குளு சீசன் நிலவுவது வழக்கம். இதற்காக இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காக்களில் அதிக அளவு பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் பூக்கள் அனைத்தும் வீணாவது வழக்கம். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை தொடங்கவில்லை என்பதால் தற்போது வரை அனைத்து பூங்காக்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

ரோஜா பூங்கா

இதில், அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் தற்போது வரை பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வழக்கமாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரியும் நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தோட்டக்கலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவை சுமார் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 534 பேர் கண்டு ரசித்தனர். நேற்றுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 931 பேர் கண்டுகளித்துள்ளனர். இதன் மூலம் பூங்கா நிர்வாகத்திற்கு சுமார் ரூ.97 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாகவும் பூங்கா மேலாளர் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார்.

சாரல் மழை

மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. மாலை நேரத்தில் பெய்த சாரல் மழை மற்றும் மேக மூட்டத்துடன் கூடிய இதமான பருவ நிலையை பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சுற்றுலா பயணிகள் அதிக வருகை காரணமாக நகர் மற்றும் வனப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக் குவரத்தை சீரமைத்தனர்.