கொடைக்கானல்,
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் குளு, குளு சீசன் நிறைவடைந்து, தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி கொடைக்கானலில் இதமான சூழல் நிலவுகிறது. இதனை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அதிகாலை முதலே கார், வேன், பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் சாரை, சாரையாக திரண்டு வந்தனர்.
இதனால் கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளிலும், வனப்பகுதி சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். மேலும் நகரில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காணப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும் சுற்றுலா இடங்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். வாகனங்களில் அமர்ந்தபடியே சுற்றி பார்த்தனர்.
இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் வந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை ஏரிச்சாலையில் நிறுத்தினர். அப்போது ஏரிச்சாலை முழுவதும் வாகனங்களாக காட்சியளித்தன. இதனால் சைக்கிள் சவாரி குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, பேரிஜம் ஏரி, அமைதி பள்ளத்தாக்கு. மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அங்கு நிலவிய சீதோஷ்ண சூழலை அனுபவித்தும், இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தும் உற்சாகம் அடைந்தனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம். 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இதுதவிர பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை கண்டு ரசித்தனர். புல் மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதுபோக்கினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. பலர் வாகனங்களிலேயே தங்கினர். ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று உணவு சாப்பிட்டனர். பல்வேறு இடங்களில் பால், பிரட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.