கொடைக்கானலில் நடைபெற்று வரும் குளுகுளு சீசன் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை காண இயலாத நிலையில் இன்றும் நாளையும் வனத்துறையின் சார்பாக வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களை இலவசமாக கண்டு களிக்க பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்தது
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் வத்தலகுண்டு சாலையில் உள்ள டைகர் சோலை முதல் ஏரிச்சாலை வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நகர் பகுதியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்ட நிலையில் மலைப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் சுற்றுலா இடங்களை காண முடியாமல் பயணிகள் வாகனங்களிலேயே அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது இருப்பினும் நகரில் காலை முதல் நிலவிய இதமான சூழ்நிலை மற்றும் மாலை நேரத்தில் குளிர் காற்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் நனைந்து மகிழ்ந்தனர். அதிக சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.