தமிழக செய்திகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் அதிக வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர் விடுமுறை காரணமாக இரண்டாவது நாளாக குவிந்த சுற்றுலா பயணிகளால் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.மொகரம் பண்டிகை மற்றும் வார விடுமுறை காரணமாக கொடைக்கானல் நகருக்கு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே நேற்றும் அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்துகின்றன.

இதனை அடுத்து கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய நிலையில் வனப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே நேற்று காலை முதல் லேசான வெப்பத்துடன் கூடிய இதமான சூழல் நிலவிய நிலையில் மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே நகருக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களை கண்டு களித்த பின்னர் நகரில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் அதிக வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சாரல் மழையை தொடர்ந்து மாலை முதல் லேசான குளிர் நிலவியது குறிப்பிடத்தக்கதாகும்.