மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். அதன்படி தற்போது கோடை விடுமுறை காரணமாக குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். மேகக்கூட்டங்களுக்கு நடுவே மலைப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மேலும் ஆங்காங்கே உருவாகியுள்ள சிறிய அருவிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.
முக்கிய சுற்றுலா தலங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, நடைபாதை காட்சி முனை, பள்ளத்தாக்கு காட்சி முனை, குகைப்பகுதி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் மரக்காடு, வானியல் ஆய்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
63-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காக்களில் நடவு செய்யப்பட்டிருந்த மலர்ச்செடிகளில் தற்போது பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இதனால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்ற சுற்றுலா பயணிகள் ஆடு, முயல், ஆராய்ச்சி பண்ணை மற்றும் புல்வெளிகளை கண்டு ரசித்தனர். மேலும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டு, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளையும் வாங்கிச் சென்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் சிறு வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.