தமிழக செய்திகள்

கோடை விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புராதன சின்னங்களை பார்க்க ரூ.40 நுழைவு சீட்டு எடுக்க பயணிகள் பலர் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு கோடை விடுமுறையை முன்னிட்டு வெயிலின் சூட்டை தணிக்கும் வகையில் பொழுது போக்குக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல், கணேசரதம், புலிக்குகை போன்ற புராதன சின்ன பகுதிகள் பொதுமக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.

அங்குள்ள புராதன சின்னங்கள் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம், செல்பி, எடுத்து மகிழ்ந்தனர். மேலும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் அனல் காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்தனர். அங்கு வெப்பத்தின் சூட்டை தவிர்க்க தங்கள் குழந்தைகளுடன் பொதுமக்கள் பலர் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. குறிப்பாக கடற்கரையில் குவிந்த பயணிகளின் பாதுகாப்புக்காக மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் உள்ளிட்ட போலீசார் சாதாரண உடையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்ததை காண முடிந்தது.

மேலும் நேற்று தொல்லியல் துறையின் நுழைவு சீட்டு மையங்களில் புராதன சின்னங்களை பார்க்க ரூ.40 நுழைவு சீட்டு எடுக்க பயணிகள் பலர் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து நுழைவு சீட்டு எடுத்து சென்றதை காண முடிந்தது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி. கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் கார். வேன், பஸ் போன்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போக்குவரத்து போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும். மாமல்லபுரம் நகர பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதை காண முடிந்தது.