தமிழக செய்திகள்

ஏற்காட்டில் மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 49-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22-ந் தேதி தொடங்கியது.

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 49-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அண்ணா பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை கவரும் வகையில் வண்ண பூக்களால் டெடிபியர் பொம்மை, மாடுகளுடன் விவசாயி உழவு மேற்கொள்ளுதல், கன்று குட்டியுடன் கறவை மாடு, ஆடு, சேவல், முயல், வாத்து மற்றும் பண்ணை வீடு, கற்பனை தேவதை, பரதநாட்டிய மங்கைகள், புளூட்டோ, கூபி போன்ற வடிவங்களும், இரட்டை இதயம் வடிவில் செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்கண்காட்சி நடக்கும் அண்ணா பூங்காவிற்கு சென்று பூக்களை ரசித்து செல்கிறார்கள். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் அண்ணா பூங்காவிற்குள் செல்ல பெரியவர்களுக்கு ரூ.60-ம், சிறியவர்களுக்கு ரூ.40-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி தொடங்கிய 22-ந் தேதி 8 ஆயிரத்து 600 பேரும். நேற்று முன்தினம் 14 ஆயிரம் பேரும் என மொத்தம் 2 நாட்களில் 22 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோடை விழாவைக்காண தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, செல்கின்றனர். இதனால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஏற்காடு டவுன் பகுதி, ஏரிச்சாலை, அண்ணா பூங்கா சந்திப்பு, படகு இல்லம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கக்கூடிய அனைத்துச் சாலைகளிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.