ஏற்காடு,
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஏற்காடு வந்தனர். அத்துடன் படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
அண்ணா பூங்காவில் மலர் செடிகள், பசுமை புல்வெளிகளில் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட காட்சி முனைகளில் இருந்து மலைகளின் அழகையும், சேலம் மாநகரின் காட்சியையும் கண்டு ரசித்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த போதிலும் ஏற்காட்டில் இதமான சூழல் நிலவியது.
சுற்றுலா பயணிகளின் வாகன வருகை அதிகமாக இருந்ததால் ஏற்காடு மலைப்பாதையின் 20 கொண்டை ஊசி வளைவுகளிலும், சேலம் முதல் ஏற்காடு மலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. உணவகங்கள், சாலையோர கடைகள், பழ வியாபாரிகள் நல்ல வருமானம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேபோல சுற்றுலா பயணிகள் பிரபலமான காபி, மிளகு, ஏலக்காய், கைவினைப்பொருட்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.