தமிழக செய்திகள்

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

உற்சாகத்தோடு குடும்பம் குடும்பமாக சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

உடுமலை,

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரக பகுதியில் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோர் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும், மலை மீது இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்துசெல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

இந்தநிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பெய்த சாரல் மழையால் அருவியில் கணிசமான அளவு நீர்வரத்து இருந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்தனர். பின்னர் உற்சாகத்தோடு குடும்பம் குடும்பமாக சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து அடிவாரத்துக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மும்மூர்த்திகளை தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி அருவி மற்றும் கோவில் பகுதியில் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.