கன்னியாகுமரி,
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்து சென்றனர். இதற்கிடையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 4-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியைக் காண திரண்டனர். ஆனால் மழை மேகம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்க்க செல்வதற்காக காலை 6 மணியில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரைச் சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், பாரதமாதா கோவில், கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சிச்சாலை, கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சுற்றுலாத்தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்