சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உறுதி செய்திடவும், தீயசக்தி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவும் உறுதியேற்று வரலாற்று வெற்றியை நோக்கி பயணித்து வரும் நமது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக களம் காணும் கே.செல்வகுமார் அவர்களை ஆதரித்து, இன்றைய தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட கழக செயலாளருடன் பங்கேற்று உரையாற்றினேன்.
அரவக்குறிச்சி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து நன்கு அறிந்தவன் நான். கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக மக்களுக்கு எந்த நலன்களும் கிடைக்கவில்லை. அதனால் தான், இந்தமுறை தமிழகமே தேசிய ஜனநாயக கூட்டணியின் பக்கம் நிற்கிறது. பொதுமக்களை பட்டிக்குள் அடைத்து வைத்து ஒரு மோசமான அரசியலை முன்னெடுத்தவர் செந்தில் பாலாஜி. ஊழல் புகாரில், 400 நாட்களுக்கும் மேலாக சிறைக்கு சென்ற ஒருவரால் மக்களுக்கு என்ன செய்ய முடியும்?
கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் 45.11 லட்சம் விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் நிதியாக ஆண்டிற்கு ரூ.6,000 பெற்று வந்தனர். ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகு இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் எண்ணிக்கை, 21.63 லட்சமாக குறைந்துவிட்டது. இப்படி நமது விவசாயிகளுக்கு சென்று சேரவேண்டிய நலத்திட்டதை கூட கொண்டு சேர்க்க விடாத திமுக ஆட்சிக்கு வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கே.செல்வகுமார் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அரவக்குறிச்சி மக்கள் வெற்றி பெற செய்யப்போவது உறுதி. திமுகவுக்கு முடிவு கட்டுவோம். தமிழகத்தை தலைநிமிர செய்வோம்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.