சேலம்,
500-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.300 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த வர்த்தக நிறுவன இயக்குனர் கைது போலீசார் கைது செய்தனர்.
சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் மோகன்முரளி. இவர் அதே பகுதியில் உள்ள பெயிண்டு கம்பெனியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். சேலம் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற விளம்பரத்தை நம்பி அழகாபுரத்தில் பிராபிட் எவர் டிரேடர்ஸ் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.28 லட்சத்தை 4 தவணையாக கடந்த ஆண்டு முதலீடு செய்தார். ஆனால் அவர் முதலீடு செய்ததற்கான முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திரும்பதரவில்லை.
இதனால் மோகன்முரளி சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அதில், சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் விஜயராகவன். அவருடைய மனைவி ராகினி. மதுரை கே.புதூர் அருகே உள்ள அழகர் நகரை சேர்ந்த செண்பகபாண் டியன் (வயது 45) ஆகியோர் அழகாபுரத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிராபிட் எவர் டிரேடர்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினர். இவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அந்த பணத்தை பங்குச்சந்தை மூலம் இரட்டிப்பாக்கி கொடுக்கப்படும் என்ற பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
இதை உண்மை என்று நம்பி, சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.300 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக மோகன்முரளி புகாரின் பேரில் போலீசார் ரூ.250 கோடி மோசடியில் ஈடுபட்ட பிராபிட் எவர் டிரேடர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராகினி, செண்பகபாண்டியன், விஜயராகவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரையில் பதுங்கி இருந்த செண்பகபாண்டியனை போலீசார் நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய ராகினி, விஜயராகவன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.