தமிழக செய்திகள்

ஆதம்பாக்கத்தில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: வெளியான முக்கிய தகவல்

போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலந்தூர்,

கழிவுநீர் குழாய் சீரமைப்பு பணி காரணமாக ஆதம்பாக்கத்தில் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து போலீஸ்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்

சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் துறையின் தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி சாலை, டாக்டர் அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே உள்ள ஆர்.சி.சி. கழிவுநீர் பிரதானக் குழாய் சேதமடைந்துள்ளது. இதனைச் சீரமைக்கும் வகையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி புதிய கழிவுநீர் குழாய் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து வாகனங்கள் சீராகச் செல்லும் வகையில் இன்று (புதன்கிழமை) முதல் 15-ந் தேதி வரை 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்று வழித்தடங்கள்

ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டிலிருந்து ஆபீசர்ஸ் காலனி மெயின் ரோடு, மஸ்தான்கோரி சாலை சந்திப்பு வழியாக பரங்கிமலை ரெயில் நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் (அரசு பஸ்கள் உள்பட) செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கக்கன் நகர் மெயின் ரோடு, ஏரிக்கரை சாலை, பிருந்தாவன் நகர் மெயின் ரோடு, பாலாஜி நகர் மெயின் ரோடு, எம்.ஆர்.டி.எஸ். சாலை வழியாக இடதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

பரங்கிமலை ரெயில் நிலையத்திலிருந்து என்.ஜி.ஓ. காலனி செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் மெயின் ரோடு. எம்.ஆர்.டி.எஸ். சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, எம்.ஆர்.டி.எஸ். சாலை, பாலாஜி நகர் மெயின் ரோடு, பிருந்தாவன் நகர் மெயின் ரோடு, ஏரிக்கரை சாலை, கக்கன் நகர் மெயின் ரோடு வழியாகச் செல்ல வேண்டிய இடத்தை அடையலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT