சென்னை,
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
தேர்தல் முடிந்து பொதுமக்கள் அனைவரும் மீண்டும் சென்னை திரும்புவதையொட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) தாம்பரம் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சீரான பயணத்தை உறுதி செய்யவும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும், நாளையும் தென் மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாக னங்கள், செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலை, வாலாஜாபாத்-காஞ்சீபுரம் சாலை, ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று அங்கிருந்து சென்னை வந்தடையலாம். சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை வந்தடையலாம்.
புதுச்சேரி. கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பயணிகள், நெரிசலற்ற பயணத்துக்காக பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட கனரக வாகன மாற்று வழிகளை பின்பற்றி, சீரான போக்குவரத்துக்காக தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.