தோஹா
கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட கடுமையான போரின்போது, கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்றுமதி முனையம் குண்டுவீச்சால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது உலக நாடுகளிடையே தீவிரமாகத் தொடங்கின. இதன் காரணமாக, கடலில் நிலவி வந்த பதற்றம் சற்றே தணிந்ததைத் தொடர்ந்து, கத்தார் அரசு தனது மூடிக்கிடந்த எரிவாயு ஏற்றுமதி முனையத்தை மீண்டும் இயக்கி, உற்பத்தியை தொடங்க திட்டமிட்டது.
இதற்காக, ஊழியர்கள் மற்றும் என்ஜினீயர்கள் அங்குள்ள பர்சான் எரிவாயு வினியோக ஆலையில் மறுசீரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்தியர்கள் உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 66 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கத்தாரில் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நெல்லையை சேர்ந்த 3 வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர். நெல்லை ராதாபுரத்தைச் சேர்ந்த பவித் (26), பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதில் பவித், சுஜித்குமாரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியுடன் மாயமான தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.