தமிழக செய்திகள்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலி: தந்தையும், மகனும் உயிரிழந்த சோகம்

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மகனும் பரிதாபமாக இறந்தார்.

மின் வேலி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிராமம் துலுக்கன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 73), விவசாயி. நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் சுரேஷ் (40). 10-க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்து வந்தார். ரங்கநாதன் தனது விவசாய நிலத்தில் காட்டு பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின் வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பலத்த மழை

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மாலை 6.30 மணியளவில் மழை நின்றதும் ரங்கநாதன் மின்வேலி அருகில் சென்று அங்கிருந்த அன்னக்கூடையை எடுக்க முயன்றார்.

சம்பவ இடத்திலேயே

அப்போது எதிர்பாராவிதமாக ரங்கநாதனின் கை மின்வேலியில் பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் உயிரிழந்தார். இதை பார்த்ததும் அந்தப் பகுதியில் பால் கறந்து கொண்டிருந்த மகன் சுரேஷ் ஓடிச் சென்று தென்னை மட்டையை கொண்டு தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது அவரது காலில் மின்கம்பி பட்டு அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் அவரும் பரிதாமாக உயிரிழந்தார். தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி இறந்ததை கண்ட ரங்காதன் மனைவி கலாவதி, சுரேஷ் மனைவி திலிபா ஸ்ரீ ஆகிய இருவரும் கதறி துடித்தனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவலறிந்த மேல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சமுத்து. பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி ரங்கநாதன், சுரேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேரணாம்பட்டு தாசில்தார் தேவியும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT