தமிழக செய்திகள்

கோடை விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்

மர்மமான முறையில் இறந்த மாணவியின் உடலை பார்த்து அவளது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயதுடைய மாணவி, அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்போது 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளாள். இந்த நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த மாணவி, தனது தாயுடன் கண்டாச்சிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளாள். நேற்று காலை மாணவி, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளது தாய், வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

பின்னர் மதியம் 1.30 மணியளவில் மாணவியின் தாய் தூங்கி எழுந்து பார்த்தார். அப்போது அங்குள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாணவியை காணவில்லை. இதனால் அவர், தனது மகளை தேடிப்பார்த்தார். அப்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டின் ஒரு அறையில் மாணவி எந்தவித அசைவும் இன்றி மயங்கிய நிலையில் கிடந்தாள்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், உறவினர்கள் அம் மாணவியை தூக்கிக்கொண்டு வெளியே வந்து பார்த்தபோது அவள் இறந்திருப்பது தெரியவந்தது. மர்மமான முறையில் இறந்த மாணவியின் உடலை பார்த்து அவளது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விழுப்புரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரகுமார் குப்தா மற்றும் கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி, வீட்டிற்குள் எப்படி இறந்து கிடந்தாள் என்ற விவரம் தெரியவில்லை. மாணவியின் உதட்டில் காயம் உள்ளதால் அவளை யாரேனும் பாலியல் பலாத்காரம் செய்வ தற்கான முயற்சியில் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் நெட்வொர்க் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து விசாரித்து வருகின்றனர். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவளது சாவுக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.