சேலம்,
கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி அனு கீர்த்தனா (19 வயது). இவர் நீட் மறுதேர்வு பயத்தில் கடந்த 17-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளாளபுரம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (45 வயது). இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (38 வயது). இவர் சேலம் மாநகராட்சியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் கோபிகா (19 வயது). இவர் சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு கடந்த 2 ஆண்டுகளாக 'நீட்' தேர்வுக்கு வீட்டில் இருந்து படித்து வந்தார்.
ஏற்கனவே 3 முறை 'நீட்' தேர்வு எழுதி உள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ‘நீட்' மறுதேர்வுக்கு தயாராகி வந்தார். இவருக்கு வாழப்பாடி அரசு பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் ஹால்டிக்கெட் ஏற்கனவே பெற்று உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை உறவினர் ஒருவரின் துக்க வீட்டிற்கு மாணவியின் பெற்றோர் சென்றனர். பின்னர் அங்கிருந்து மாணவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவியை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நீட் மறுதேர்வு பயத்தை மாணவி கோபிகா எங்களிடம் இதுவரை காண்பிக்கவில்லை என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.