தமிழக செய்திகள்

ராமநாதபுரம் அருகே சோகம்: அரசு பேருந்து மீது பைக் மோதி விபத்து - 2 பேர் பலி..!

பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம்,

விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் முகமது அர்ஷத் (19), முகமது பகத் (18), முகமது ஹசன் (19). நெருங்கிய நண்பர்களான இவர்கள் 3 பேரும் சென்னை, மதுரை ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

தற்போது தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் 3 பேரும் சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்திருந்தனர். அப்போது பல்வேறு இடங்களுக்கு நண்பர்களாக சேர்ந்து சென்று வந்துள்ளனர்.

அரசு பேருந்து மீது பயங்கர மோதல்

இந்த நிலையில், நேற்று இரவு 3 பேரும் பைக்கில் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

புல்லங்குடி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அதிக வேகத்தில் சென்ற பைக் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

மோதிய வேகத்தில் பைக்கில் சென்ற 3 பேரும் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். அப்போது அவர்கள் மீது அரசு பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது.

இந்த கோர விபத்தில் முகமது ஹசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிகிச்சை பலனின்றி மற்றொருவரும் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த முகமது அர்ஷத் மற்றும் முகமது பகத் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் முகமது பகத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

நண்பர்களாக ஒன்றாக சென்ற 3 பேரில் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம், பைக் சென்ற வேகம் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT