தமிழக செய்திகள்

சேலம் அருகே சோகம்.. காதல் விவகாரத்தில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு

ஆசிரியை எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியை சேர்ந்த குமார் என்பரின் மகள் சண்முகப்பிரியா (23). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சண்முகப்பிரியாவும், அமரகுந்தி, நெய்க்காரவளவை சேர்ந்த கவுதமும் (23) கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கவுதமின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பேசுவதை சண்முகப்பிரியா நிறுத்திவிட்டார். ஆனால், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சண்முகப்பிரியாவை கவுதம் தொந்தரவு செய்துவந்துள்ளார். இதனால், சண்முகப்பிரியாவின் தாய் விஜயலட்சுமி கவுதம் வீட்டுக்கு சென்று கண்டித்துள்ளார். எனினும், கவுதம், சண்முகப்பிரியாவின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இருவரும் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்வதோடு, நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா செவ்வாய்க்கிழமையன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீசார் சண்முகப்பிரியாவின் உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், சண்முகப்பிரியா எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதத்தை மீட்டனர். அதில் எனது இறப்புக்கு கவுதம் தான் காரணம் என்று எழுதிவைத்துள்ளார்.

இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தாய் விஜயலட்சுமி மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சூழலில் கவுதமை கைது செய்தால் மட்டுமே சண்முகப்பிரியாவின் உடலை பெற்றுக்கொள்வோம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கவுதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவரைக் கைது செய்யாததால் நேற்றும் (புதன்கிழமை) சண்முகப்பிரியாவின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனிடையே கவுதமை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.