தமிழக செய்திகள்

தக்கலை அருகே சோகம்: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி திடீர் உயிரிழப்பு

கடந்த ஒருவாரமாக மாணவி காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தக்கலை,

தக்கலை அருகே உள்ள விலவூர் அருவித்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயவாசிங் (வயது 44). இவர் டயர் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர். இதில் மூத்த மகள் ஷெல்லி ஜோய் (13) முளகுமூட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

காய்ச்சல்

இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மாணவி காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக வீட்டின் அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். உடல் நிலை தேறியதும் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கூடம் சென்றுள்ளார். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டார்.

மூச்சு திணறல்

இரவில் சாப்பிட்டு விட்டு படுத்த நிலையில் 11 மணிக்கு தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். பிறகு தண்ணீரை குடித்த போது சுவாசிக்க முடியாமல் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் ஷெல்லிஜோயை மீட்டு, பனவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியை டாக்டர் பரிசோதித்த போது, ஏற்கனவே மாணவி இறந்தது தெரியவந்தது.

விசாரணை

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT