தமிழக செய்திகள்

வால்பாறை அருகே சோகம்: பள்ளி ஆசிரியர் உட்பட 10 பேர் பலி - போலீஸ் தீவிர விசாரணை

13-வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த வேன் மலையில் உருண்டு 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்து விழுந்தது.

கோவை,

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா அருகே தளிபரம்பு பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட 13 பேர், கடந்த 14-ந் தேதி சித்திரை விசு பண்டிகையையொட்டி கேரளாவில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் மாலை 5.15 மணியளவில் வந்த போது எதிர்பாராதவிதமாக திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சுமார் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

13-வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த வேன் மலையில் உருண்டு 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்து விழுந்தது. இந்த விபத்தில் சுற்றுலா வேன் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் அதில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதை கண்ட வாகன ஓட்டிகள், காடம்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் போலீசார், வனத்துறையினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானநிலையில், எஞ்சியவர்களும் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.