தஞ்சாவூர்,
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி-திருவையாறு பைபாஸ் பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு நாளை தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழா நடக்கிறது. இந்த திருமண விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக திருமண மண்டபத்தின் அருகில் இரும்பு குழாயில் தி.மு.க. கொடியை ஊன்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வகையில் மண்டபம் அருகில் இரும்பு குழாயில் பொருத்தப்பட்டிருந்த தி.மு.க. கட்சி கொடியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது45), சேலம் எத்திக்குட்டை ரோடு பகுதியை சேர்ந்த கோகுல் (29) ஆகியோர் மேலே சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் இரும்பு குழாய் ஊன்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 2 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.