வேலூர்,
வேலூர் கஸ்பா சித்தார்த்தா தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 65). தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 3 மகள்கள் இருந்தனர். பார்த்திபனின் 5-வது மகனான சந்திரகாந்த் (25) திருமண வரவேற்பு, பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை.
சந்திரகாந்துக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை நேற்று முன்தினம் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் சந்திரகாந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் இறந்தது குறித்து வீட்டில் இருந்த அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்ட அதிர்ச்சியில் பார்த்திபன் மயக்கமடைந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் மகன் இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் தந்தை, மகன் இருவரின் உடல்களும் இறுதிச்சடங்கு நடத்தி அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.