தமிழக செய்திகள்

தொட்டில் கட்டி விளையாடியபோது விபரீதம்: கல் உடைந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

விநாயகமூர்த்தி அந்த தொட்டிலில் அமர்ந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக சேலை கட்டப்பட்டு இருந்த கல்லின் அடிபாகம் உடைந்து விழுந்தது.

மதுரை

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர்புளியங்குளத்தில் வசித்து வருபவர் பூமாதெய்வம் (வயது 40). கொத்தனார். இவருடைய மனைவி பாண்டீஸ்வரி (35). இவர்களுக்கு விநாயகமூர்த்தி (7) உள்பட 3 பிள்ளைகள் இருந்தனர். 2-வது மகனான விநாயகமூர்த்தி, அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் விநாயக மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் ஊன்றப்பட்டு இருந்த உயரமான கற்களில் (குத்துக்கல்) சேலைகளை தொட்டிலாக கட்டி விளையாடினர்.

விநாயகமூர்த்தி அந்த தொட்டிலில் அமர்ந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக சேலை கட்டப்பட்டு இருந்த கல்லின் அடிபாகம் உடைந்து விழுந்தது. இதனால் தொட்டிலில் இருந்த விநாயகமூர்த்தி, தலைகீழாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவனுக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் சிறுவன் கதறினான்.

பரிதாபமாக உயிரிழந்தான்

அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விநாயகமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.