ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, நீச்சல் கற்றுக் கொண்டிருந்த 17 வயது பள்ளி மாணவி பழைய கல்குவாரி குட்டையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த யாமினி (17), அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கிராமம் அருகே உள்ள பழைய கல்குவாரி குட்டைக்கு தனது தாயாருடன் துணி துவைப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, யாமினிக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் வகையில் அவரது தாயார் உடலில் துணி கட்டி தண்ணீரில் பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக யாமினி குட்டையின் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.
நீண்ட நேரமாக அவர் வெளியே வராததை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் கூச்சலிட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டதுடன், ராணிப்பேட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு, யாமினியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயின் கண் முன்னே நீரில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பூண்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.