தமிழக செய்திகள்

பள்ளிக்கு சென்றபோது பரிதாபம்.. ஸ்கூட்டர் மீது வேன் மோதி தாத்தா, பேரன், பேத்தி பலி

ஐஸ்கிரீம் ஏற்றி வந்த சரக்கு வேன், சிறுவர்களின் தாத்தா ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் மோதியது.

காவேரிப்பாக்கம்,

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு (வயது 60). தையல் கடை நடத்தி வந்தார். இவருக்கு தண்டபாணி என்ற மகனும், நிர்மலா என்ற மகளும் உள்ளனர்.

தண்டபாணி அதேபகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவருக்கு அஜய் (9) என்ற மகனும், குணஸ்ரீ (7) என்ற மகளும், நிர்மலாவுக்கு அஸ்வந்த் (7) என்ற மகனும் உண்டு. அவர்களில் அஜய், குணஸ்ரீ மற்றும் அஸ்வந்த் ஆகிய 3 பேரும் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வேலு தனது பேரக் குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக ஓச்சேரியில் இருந்து தனது ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார்.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அருகே சென்றபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஐஸ்கிரீம் ஏற்றி வந்த சரக்கு வேன், வேலு ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அவர்களில் வேலு, குணஸ்ரீ, அஸ்வந்த் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த அஜய், வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் ஜெயசூர்யா (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.