சென்னை,
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புக்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 36,344 இருக்கைகளுடன் மற்றும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 26,388 இருக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 70 பொறியியல் மற்றும் 34 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பிரபலமான தொழிற்பிரிவுகளான பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட தொழிற்பிரிவுகளிலும் தொழில் 4.0 தரத்திலான அட்வான்ஸ்டு சி.என்.சி, ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெஹிக்கிள் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 31.08.2026 வரை சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையங்களில் ஒவ்வொரு கல்வியாண்டும் ஆகஸ்டு திங்களில் பயிற்சி தொடங்கும்.
அதன்வழி, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 14.08.2026 அன்று நடைபெற்ற விழாவில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய வகுப்புகளைத் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி மற்றும் வரைபடக் கருவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் வழங்கினார்.
சென்ற ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் சென்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் 10 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த துறையால் நடத்தப்பட்ட 9வது மாநில அளவிலான படைப்புத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 17 அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் அடங்கிய 5 குழுக்களுக்கு தலா ரூ.50,000/- ரொக்கப்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும், இவ்விழாவில் 2026-ஆம் கல்வியாண்டில் 100 சதவீத சேர்க்கை மேற்கொண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இவ்விழாவில், கொ. வீரராகவராவ், இ.ஆ.ப., அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.