தமிழக செய்திகள்

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி: மிஸ் திருநங்கையாக சென்னை ஓமணா தேர்வு

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கி ழமை) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் திருநங்கைகள், தங்களை புதுமணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வருகை வருவார்கள்.

அவர்கள் அரவாண் சாமியை கணவராக பாவித்துக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். நாளை மறுநாள் (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரானது, கூவாகம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் அழிகளம் நோக்கி புறப்படும். அதுவரை ஆட்டமும், பாட்டமும் மகிழ்ச்சியாக இருக்கும். திருநங்கைகள், தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டதும் தாலியை அறுத்துக்கொண்டு வெள்ளைப்புடவை உடுத்தி விதவைக்கோலத்துக்கு மாறுவார்கள்.

இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத் திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் திருநங்கைகளின் தலைவர்கள், தொண்டு நிறுவனத்தினர் இணைந்து கூவாகம் திருவிழா நிகழ்ச்சியை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடத்தியது. இதற்கு தேசிய திருநங்கைகள் கூட்டமைப் பின் தலைவர் ஜீவா அம்மாள் தலைமை தாங்கினார்.

மிஸ் திருநங்கை-2026 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, பெங்க ளூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 12 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 2-வது சுற்று அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 12 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். தமிழ் கலாச்சாரம், நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் மிஸ் திருநங்கையாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 5 பேருக்கும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த ஓமணா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த சாய்ஸ்ரீ 2-ம் இடத்தையும், ஸ்விகி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிர மும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிர மும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.