விழுப்புரம்,
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள், விழுப்புரத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மாலை 6 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் கல்வி, வேலை வாய்ப்பில் சிறந்து விளங்கும் தமிழக திருநங்கைகளின அணிவகுப்பு, மிஸ் திருநங்கை அழகிப்போட்டி தேர்வு, திருநங்கைகளின் நடன நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெறுகிறது.
இதனைத்தொடர்ந்து தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ் கூவாகம் அழகிப்போட்டிக்கான முதல் சுற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு இறுதிச்சுற்று போட்டி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெறுகிறது.