தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை கைது

தூத்துக்குடியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், திருநங்கையின் செல்போனை திருப்பி கொடுக்காததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை கைது செய்யப்பட்டார்.

செல்போனை திருப்பி கேட்டு தகராறு:

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை பனையூர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த அன்பு மாதவன் மகன் அஜய் தேவகுமார் (வயது 20). இவர் தூத்துக்குடி உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த திருநங்கையான அபர்ணா(28) என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கை அபர்ணாவின் செல்போனை அஜய் தேவகுமார் வாங்கி சென்றாராம். பின்னர், அவர் செல்போனை திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அஜய் தேவகுமார் கோயமுத்தூர் செல்வதற்காக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை அபர்ணா அஜய் தேவகுமாரிடம் செல்போனை கேட்டு தகராறு செய்தாராம். அப்போது அவர் செல்போன் என்னிடம் இல்லை என்று கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கை:

அதற்குள் ஆம்னி பேருந்து வரவே பேருந்துக்குள் ஏறி அஜய் தேவகுமார் தனது சீட்டில் அமர்ந்திருந்தாராம். இந்த நிலையில் ஆத்திரமடைந்த திருநங்கை அபர்ணா பேருந்துக்குள் ஏறி அங்கே இருந்த அஜய் தேவகுமாரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அலறடித்து கீழே இறங்கி ஓடினர்.

கைது:

பின்னர் படுகாயம் அடைந்த அஜய் தேவகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநங்கை அபர்ணாவை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.