சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணியை தனியார் நிறுவனமான கேம்பெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ஒரு மாணவர் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் தரவுகள் மற்றும் ஆவணங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, விடைத்தாள் திருத்தும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட்டதா, தகுதியான ஆசிரியர்கள் போதுமான அளவில் ஈடுபடுத்தப்பட்டார்களா, மதிப்பெண் வழங்கலில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பிழைகள் ஏற்பட்டுள்ளனவா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் பங்கேற்கும் நிலையில், மதிப்பீட்டு செயல்முறையில் ஏற்படும் சிறிய தவறு கூட ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும், எதிர்கால கனவுகளையும் பாதிக்கக்கூடியதாகும்.
எனவே, இந்த விவகாரத்தை சாதாரண நிர்வாக குறைபாடாக கருதாமல், மாணவர்களின் கல்வி உரிமையுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினையாக அணுக வேண்டும். கல்வி என்பது வணிகம் அல்ல; மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பான சமூகப் பணியாகும். எனவே, விடைத்தாள் திருத்தம் போன்ற முக்கிய பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போது கடுமையான கண்காணிப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். எனவே, மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
கேம்பெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். விடைத்தாள் திருத்தப் பணிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து சுயாதீன விசாரணைக் குழு அமைக்க வேண்டும். மாணவர் வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதிப்பீட்டு செயல்முறையில் பிழைகள் கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சந்தேகங்கள் எழாத வகையில் வெளிப்படையான மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் உழைப்பும் எதிர்காலமும் எந்தவித நிர்வாக அலட்சியத்திற்கும் அல்லது சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளுக்கும் பலியாகக் கூடாது. உண்மைகள் எதுவாக இருந்தாலும் அவை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். மாணவர்களின் நலனையும் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தில் முழுமையான, நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே கல்வி சமூகத்தின் ஒருமித்த கோரிக்கையாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.