சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தில் நிலவி வரும் சமூகச் சூழலையும் மாணவர்களின் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக மூட தமிழக முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக 276 வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள கடைகள், 186 கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள கடைகள் மற்றும் 255 பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள கடைகள் என அடையாளம் காணப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சமூக அமைதிக்கு வித்திடும் ஒரு நல்வாய்ப்பாகும். பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக மதுக்கடைகளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டங்களுக்குக் கிடைத்த ஒரு தொடக்ககால வெற்றியாகவே இதனை நாங்கள் கருதுகிறோம்.
இருப்பினும் அரசின் இந்த அறிவிப்பு முழுமையான வெற்றி பெற வேண்டுமானால் அதில் நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது மிக அவசியமாகும். எந்தவொரு கொள்கை முடிவும் அறிவிப்போடு நின்றுவிடாமல் அது களத்தில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு. எனவே மூடப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த 717 மதுக்கடைகளின் விரிவான பட்டியலை மாவட்ட வாரியாகவும் பகுதி வாரியாகவும் கடை எண்களுடன் தமிழக அரசு உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு இந்தப் பட்டியலை வெளியிடுவதன் மூலம் மட்டுமே அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலுள்ள கடைகள் மூடப்பட்டதை உறுதி செய்ய முடியும். மேலும் மூடப்பட்ட கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதையோ அல்லது பெயரளவில் மட்டும் மூடப்பட்டு பின்வாசல் வழியாகச் செயல்படுவதையோ தடுக்க இந்தப் பட்டியல் ஒரு முக்கிய ஆவணமாக அமையும்.
அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் முழுப்பயனும் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டுமானால், அந்த 717 கடைகளின் பட்டியலை உடனடியாக வெளியிட்டு மக்களின் கண்காணிப்பிற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். ஆரோக்கியமான மற்றும் மதுவற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான இந்த முதற்படியில் அரசு முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.