தமிழக செய்திகள்

மின்சாரத்துறையில் வெளிப்படையான நிர்வாகம்: தகுதியுள்ள நிறுவனங்களுக்கே டெண்டர் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதி

மின்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் போர்டல் வாயிலாக வெளிப்படையான டெண்டர் முறை அமல்படுத்தப்படும்.

சென்னை,

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டு, தங்களது தொழில்சார் பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரியத்தில் நிலவும் நடைமுறைகள் குறித்த கோரிக்கைகளை அமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தனர். கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

“தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திலேயே மின்சாரத் துறையில் நிலவி வந்த முறைகேடுகளை களைய பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் முறைகேடாக வழங்கப்பட்ட டெண்டர்கள் மீளாய்வு செய்யப்பட்டு, புதிய வெளிப்படையான டெண்டர் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மின்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் போர்டல் வாயிலாக வெளிப்படையான டெண்டர் முறை அமல்படுத்தப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த ஆட்சியில் இடைத்தரகர்களுக்கும், முறைகேடுகளுக்கும் இடமில்லை. நிர்வாகத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது ரூ.2.50 லட்சம் கோடி கடன் சுமையுடன் இயங்கும் மின்துறையை நஷ்டத்திலிருந்து மீட்டு, லாபகரமான அமைப்பாக மாற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக டெண்டர் வழங்கும் முறை இனி தொடராது. அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் ஒளிமறைவற்ற டெண்டர்கள் வழங்கப்படும். மின் கம்பங்கள் உள்ளிட்ட பணிகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இனிமேல் தகுதியான மற்றும் திறமையான நிறுவனங்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்படும். பணிகள் முடித்த நிறுவனங்களுக்கு காலதாமதமின்றி நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சோலார் மற்றும் காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு தனிக்குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளிப்படையான முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இன்னும் ஓராண்டுக்குள் மின்துறையில் முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நஷ்டங்கள் குறைக்கப்பட்டு, சீருடனும் செழிப்புடனும் செயல்படும் துறையாக மாற்றப்படும்” இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. டி.ஜி. வினய், இ.ஆ.ப., மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., மின் தொடரமைப்பு மேலாண்மை இயக்குநர் டி. சிவகுமார் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.