தமிழக செய்திகள்

வேளச்சேரி அரசு மத்திய தானியங்கி பணிமனையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆய்வு

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அரசுப் பேருந்தில் பொது மக்களுடன் பயணித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னை,

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வேளச்சேரி அரசு மத்திய தானியங்கி பணிமனை மற்றும் இயக்குநர் அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிறுத்தம் வழியாகச் செல்லும் மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்தில் ஏறி முறையான பயணச்சீட்டு பெற்று, பொது மக்களுடன் பயணித்து, அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அரசு பேருந்துகளில் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பயணத்தில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் கேட்டறிந்து, இடர்பாடுகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை உடனடியாகக் களைவதாக உறுதியளித்தார்.

மேலும், அப்பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடமும், அவர்களுக்கு பணிசெய்வதில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்திருந்த பொது மக்களிடம் கலந்துரையாடி, பேருந்துகள் உரிய நேரத்தில் வருவது குறித்தும், தாங்கள் செல்ல வேண்டிய வழித்தடங்களுக்கு போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்பது குறித்தும், கேட்டறிந்து, பொது மக்கள் தெரிவித்த கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும், நேரக்காப்பாளர், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோருடனும் கலந்துரையாடி அவர்களுக்கு பணிசெய்வதில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வேளச்சேரி அரசு மத்திய தானியங்கி பணிமனை மற்றும் இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டு, இயக்குநர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடி பணிமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, இயக்குநர் மற்றும் பணியாளர்கள் பணிமனை மேம்படுத்துவது தொடர்பாக வைத்த கோரிக்கையினை துறை செயலாளருடன் ஆலோசித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.