சென்னை,
சென்னை தியாகராய நகரில் கார்கள் மீது பழமையான மரம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. வழக்கம்போல தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் உள்ள சாரதாம்பாள் தெருவில் சாலையோரம் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அன்று அதிகாலையில் அங்கிருந்த பழமையான பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது.
இந்த விபத்தில், மரத்தின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சொகுசு கார்கள் பலத்த சேதமடைந்தன. அதிகாலை நேரம் என்பதால் கார்களுக்குள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், மின்சார ரம்பங்கள் மூலம் மரத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கார்கள் மீட்கப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.