தமிழக செய்திகள்

அழகு நிலையத்தில் அத்துமீறல்: பெண்களை மிரட்டி பணம் பறித்த 2 போலீசார் கைது

நெல்லையில் ஒரு அழகு நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசி அச்சுறுத்தியதால் ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை பெண் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது காவலர் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பாக நின்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாகப் புகார் வந்துள்ளது; நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் தர வேண்டும்" என மிரட்டியுள்ளார். மேலும் ஆபாசமாகப் பேசி அச்சுறுத்தியதால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அங்கிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அழகு நிலைய உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தேர்தல் பணிக்காக வந்த மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் என்பது தெரியவந்தது.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, பிரான்சிஸ் (வயது 34) மற்றும் நெல்லை செந்தில்நகர், சேதுபதிராஜா(27) என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லைக்கு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அத்துமீறி நுழைதல், பெண்ணின் கண்ணியத்திற்குப் பாதகம் விளைவித்தல், பணம் பறித்தல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 2 போலீசாரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT