சென்னை,
’வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் விவசாய வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயமாக நிகழ்வது 1970ஆம் ஆண்டு நடைபெற்ற மின் கட்டண உயர்வுக்கு எதிரான விவசாயிகள் போராட்டமாகும். ஒரு பைசா மின் கட்டண உயர்வைக் கூட ஏற்க முடியாது என்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கப் போராடிய அந்த இயக்கத்தில் தங்களது இன்னுயிரை ஈந்த மூன்று விவசாய தியாகிகளுக்கு எனது ஆழ்ந்த வீரவணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன்.
உலகிற்கு உணவளிக்கும் உன்னதப் பணியைச் செய்யும் விவசாயிகள், உரிமைகளுக்காகவும். எதிர்கால தலைமுறைகளின் நலனுக்காகவும் பவ்வேறு காலகட்டங்களில் தியாகங்களை செய்துள்ளனர். அவற்றில் முக்கியமானதாக விளங்கும் இந்த வரலாற்று தியாகம் விவசாயிகளின் ஒற்றுமை உறுதி மற்றும் போராட்ட மனப்பான்மையின் அடையாளமாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது.
சாதி, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி விவசாயம் என்ற பொதுவான உயிர்நாடியை பாதுகாக்க ஒன்றுபட்ட அந்த தியாகிகளின் அர்ப்பணிப்பு, இன்றைய தலைமுறைக்கும் ஒரு முன்னுதாரணமாகும். அவர்களின் தியாகம் வீணாகாமல், விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, விவசாயம் லாபகரமான தொழிலாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், 19.06.2026 அன்று பெருமாநல்லூரில் நடைபெறும் விவசாய தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வை மனதார வரவேற்கிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தியாகிகளின் நினைவைப் போற்றும் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் நலனே நாட்டின் நலன் விவசாயத்தின் வளமே இந்தியாவின் வளம் உயிர்த் தியாகம் செய்த அந்த மூன்று விவசாய மாவீரர்களின் நினைவு என்றும் நம் செஞ்சங்களில் நிலைத்திருக்கும் விவசாய தியாங்களுக்கு வீர வணக்கம்!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.