திருச்சி,
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியை தேடி வந்தனர். பின்னர் சிறுமியை கண்டுபிடித்து அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அந்த சிறுமி அவருடன் செல்ல மறுத்ததால் குழந்தைகள் காப்பகத்தில் ஒப் படைக்கப்பட்டார்.
அப்போது, சிறுமி தனக்கு சிலர் பாலியல் தொந்தரவு செய்ததாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதுபற்றி அறிந்த குழந்தைகள் நலக்குழுவினர் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
அந்த சிறுமியிடம் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் பழகி வந்துள்ளனர். இவர்கள் அந்த சிறுமியை வெவ்வேறு காலகட்டங்களில் தனித்தனியாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிலர் சிறுமியை பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 7 சிறுவர்கள் உள்பட 9 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் 9 பேரும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோட்டை அனைத்து மகளிர் போலீசார் 7 சிறுவர்கள் உள்பட 9 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.