திருச்சி,
கல்லக்குடி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 13 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புள்ளம்பாடி ஒன்றியம் கோவாண்டகுறிச்சி ஊராட்சி வடுகர்பேட்டை அன்னை நகரில் வசித்து வருபவர் செபஸ்தியார் (வயது 60). இவரது மனைவி எலிசபெத்மேரி(55). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். செபஸ்தியார் ஒடிசாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மூத்த மகள் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்து வருகிறார். 2-வது மகள் கோயம்புத்தூரில் செவிலியர் பயிற்சி கல்லூரியில் பயின்று வருகிறார். மூன்றாவது மகள் திருநெல்வேலியில் பல் மருத்துவர் படிப்புக்கு சேர்ந்துள்ளார்.
இதையடுத்து எலிசபெத்மேரி தனது முதல் மகளுடன், 3-வது மகளை திருநெல்வேலியில் உள்ள கல்லூரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை விட்டுவிட்டு, மீண்டும் நேற்று அதிகாலை கோவாண்டகுறிச்சிக்கு திரும்பி வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் அலங்கோலமாக கிடந்தன. இதையடுத்து அவர் பீரோவில் பார்த்தபோது, அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள், வெள்ளி டம்ளர் மற்றும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் கல்லக்குடி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் லால்குடி துணை சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்தார்.
வீட்டின் பின்புற கதவு மற்றும் பீரோவில் இருந்த கைரேகைகளை பதிவு செய்ய செய்தார். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, லால்குடி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை அமைத்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.