தமிழக செய்திகள்

திருச்சி: மத்திய மண்டல காவல் பணிகள் குறித்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு

காவல்துறையினருக்கான குறைதீர் கூட்டத்தையும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நடத்தினார்.

திருச்சி,

காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத்தலைவர் அலுவலகம், சென்னை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத்தலைவர், திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய மண்டலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்ற நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தரவு மையங்கள் திறப்பு

இது தொடர்பாக, தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய மண்டலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்ற நிலவரம் தொடர்பாக விரிவான ஆய்வினை மேற்கொண்டார். இவ்வாய்வுக் கூட்டத்தில், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர், திருச்சி மாநகர காவல் ஆணையர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரகங்களின் துணை காவல்துறைத் தலைவர்கள், மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், திருச்சி மாநகர துணை காவல் ஆணையர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத்தலைவர், திருச்சி மாவட்டத்தில் தரவு மையத்தை (DATA CENTER) திறந்து வைத்ததுடன், காணொளி காட்சி வாயிலாக மத்திய மண்டலத்திற்குட்பட்ட மற்ற 8-மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இதேபோன்ற தரவு மையங்களையும் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார். இத்தரவு மையத்தின் மூலம் காவல் நிலைய பதிவுகள், குற்றப் புலனாய்வு தொடர்பான விவரங்கள், வாகனத் தகவல்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் காவல் சேவைகள் உள்ளிட்ட தகவல்களை காவல்துறையினர் எளிதில் அணுக முடியும். மேலும், சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் குற்றப் போக்குகளை கண்டறிதல், தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்தல், பல்வேறு வழக்குகளுக்கிடையேயான தொடர்புகளை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உளவுத் தகவல்களை வழங்குதல், சமூக வலைதள ஊடக கண்காணிப்பு, வெளிநாட்டவர் கண்காணிப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகளுக்கான தரவு அடிப்படையிலான முடிவெடுப்பை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு இத்தரவு மையம் உதவுகிறது.

காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத்தலைவர் சட்டம்-ஒழுங்கை திறம்பட பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். குறிப்பாக, சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளிகள் (History-Sheeters) மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையான சந்தர்ப்பங்களில் பிணை ரத்து நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளவும், காவல் நிலைய அளவில் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

ரூ.1 கோடி இழப்பீடு

மேலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் தீவிர பங்களிப்புடன் போதைப்பொருள் இல்லாத காவல் நிலைய சரகங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த SSI முத்துக்குமார், ஜூலை 2025-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/காவல் படைத்தலைவர் மூலம், அவரது மனைவி பாப்பா செல்வியின் பெயரில், பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1கோடி இழப்பீட்டுத் தொகைக்கான வங்கி காசோலை வழங்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் எவ்வித இடையூறும் இன்றி சிறப்பாக நடத்தப்பட்டதற்காக திருச்சி மாவட்ட காவல்துறை தலைமை இயக்குநர்/காவல் படைத்தலைவர் திருச்சி காவல்துறையினரை பாராட்டினார். சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில், 110 காவல் ஆளிநர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன.

காவல்துறையினருக்கான குறைதீர் கூட்டம்

இப்பயணத்தின் ஒரு பகுதியாக, காவல்துறையினருக்கான குறைதீர் கூட்டத்தையும் காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத்தலைவர் நடத்தினார். இதில் மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையைச் சேர்ந்த 143-காவல் ஆளிநர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர். பெறப்பட்ட மனுக்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், திருச்சிமாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொபைல் தடய அறிவியல் வாகனத்தை (Mobile Forensic Van) காவல்துறை தலைமை இயக்குநர் / காவல் படைத்தலைவர் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

மேலும், 8 காவல்துறை சிறுவர் மன்றங்களுக்கு (Police Boys' Clubs) விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. அவற்றில் கிரிக்கெட் மட்டைகள், கிரிக்கெட் பந்துகள், கிரிக்கெட் ஸ்டம்புகள், கைப்பந்து, கால்பந்து, ஷட்டில் ராக்கெட்டுகள், ஷட்டில் காக், கேரம் போர்டுகள், சதுரங்கப் பலகைகள், சிலம்பக் கம்புகள், கைப்பந்து மற்றும் ஷட்டில் காக் வலைகள் மற்றும் எடை அளவிடும் இயந்திரங்கள் ஆகியவை அடங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT