திருச்சி,
பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு துறையூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிகத்தில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்த நிலையில், பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
அதே சமயம் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் பண்டிகை நாளிலும் தங்கள் பணிகளை செய்து வந்தனர். அந்த வகையில், குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியாமல் பணியில் இருந்த லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த துறையூர் காவல்துறையினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், பெரம்பலூர் புறவழிச்சாலையில் சொரத்தூர் ரவுண்டானா வழியாகச் சென்ற லாரி மற்றும் பேருந்துகளை காவல்துறையினர் நிறுத்தி, அதில் இருந்த ஓட்டுநர்களை அழைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் கருணாகரன், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இரவு பகல் பாராமல் சாலைகளில் பயணித்து உழைக்கும் ஓட்டுநர்களின் சேவையை பாராட்டியதோடு, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினருடன் இணைந்து ஓட்டுநர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். குடும்பத்தினருடன் பண்டிகை தினத்தை கொண்டாட முடியாமல் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய காவல்துறையினரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.