சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால், 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர முடியாது என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ந்தேதி முதல், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது.
பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியை தழுவி இருந்தார்.
எனவே, அவரே மீண்டும் களம் காண்பாரா, அல்லது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினே களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில், த.வெ.க. தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.