திருச்சி,
காதல் தோல்வியால் திருச்சி என்.ஐ.டி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் கல்வி நிறுவனான தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி.) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவ-மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும், சிலர் கல்லூரியை சுற்றியுள்ள பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் உள்ளனர்.
இக்கல்லூரியில் சென்னை குரோம்பேட்டை திருமுடிவாக்கத்தை சேர்ந்த அரவிந்தன் தாசன் மகன் ஷிருத்திக் (21 வயது) என்பவர் பி.டெக். இறுதியாண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி விடுதியில் தங்கி இருந்த பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். சில மாணவர்கள் மட்டும் விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ஷிருத்திக் தன்னுடன் படிக்கும் மாணவர் பிரசன்னாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு தகவல் அனுப்பினார். அதில், 'எனது அறைக்கதவை உடைத்து பார்க்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார். அந்த தகவலை பிரசன்னா காலை 9 மணியளவில் தான் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசன்னா உடனடியாக சக மாணவர்களுடன் விடுதி அறைக்கு விரைந்து வந்தார்.
பின்னர் பூட்டி இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் உள்ள மின்விசிறியில் 'ஸ்கிரீன்' துணியால் ஷிருத்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் மாணவர்கள் உடனடியாக என்.ஐ.டி. பாதுகாவலர்களுக்கு தெரிவித்தனர். அதன்பின் துவாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷிருத்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ஷிருத்திக் கல்லூரியில் படித்து வந்த தன்னுடைய சீனியர் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு படிப்பு முடிந்ததும் அவர் கல்லூரியை விட்டு சென்று விட்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதற்கிடையில், ஷிருத்திக் தனது காதலிக்கும், பெற்றோருக்கும் தனித்தனியாக உருக்கமாக கடிதம் எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தில் காதல் தோல்வி அடைந்ததால் மன வருத்தத்தில் இருந்து வந்தேன். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். போலீசார் அந்த கடிதங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷிருத்திக் சமீபத்தில் நடந்து முடிந்த வளாக நேர்முகத்தேர்வில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்.ஐ.டி. விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.