தமிழக செய்திகள்

திருச்சி நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம்: 2 டாக்டர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நர்சிங் மாணவி சீதாலட்சுமி கடந்த மாதம் 23-ந்தேதி திடீரென இறந்தார். அவரது சாவுக்கு மயக்க மருந்து அதிகமாக கொடுக்கப்பட்டதுதான் காரணம், கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சக நர்சிங் மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து சீதாலட்சுமி சாவு தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் மாணவிக்கு அறுவை சிகிச்சையின்போது செலுத்தப்பட்ட டெக்சா மெதாசோன் என்ற மருந்து தடை செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த போது பணியில் இருந்த மயக்கவியல் டாக்டர்கள் 2 பேர் தற்போது வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.