திருச்சி,
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கலைச்செல்வி. இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது 19 வயதான மகள் சீதாலட்சுமி மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு மூக்கில் சதை வளர்ந்ததாக கூறி திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசுத்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினர். இதையடுத்து அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் சக மாணவிகள், மருத்துவரின் தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். அத்துடன், மாணவியின் பெற்றோர் மற்றும் சக நர்சிங் மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மாவட்ட கலெக்டருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, நர்சிங் மாணவிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும், மாணவியின் குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில், 12 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.